முன்னோர்கள் நமக்கு தினம்தோறும் அருளாசி வழங்கிக் கொண்டே இருப்பார்கள், உங்களின் தினசரி வழிபாடு இப்படி இருந்தால், உங்களுடைய பிரச்சினைகள் படிப்படியாக குறையும் !!

நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய, கஷ்ட நஷ்டங்களுக்கு தீர்வு தரக்கூடிய, சக்தி முன்னோர்களின் ஆசீர்வாதத்திற்கு உள்ளது. பித்ருக்களுக்கு நாம் எந்த ஒரு கடனையும் வைத்து விடக் கூடாது. அவர்கள் மனநிறைவு அடையும் அளவிற்கு பூஜை புனஸ்காரங்களை தவறாமல் நாம் செய்து விட வேண்டும். பித்ருக்களுக்கு செய்யக்கூடிய திதி முதற்கொண்டு, தினசரி வழிபாட்டையும் சரிவர செய்து, அவர்களது மனம் குளிர்ந்தால், நம்முடைய குடும்பமும் சுபிட்சமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. முன்னோர்களின் ஆசீர்வாதத்தை நாம் முழுமையாகப் பெறுவதற்கு, தினசரி வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும்? எந்தெந்த பொருட்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

முன்னோர்களின் திருவுருவப்படம் கட்டாயம் நம்முடைய வீடுகளில் இருக்கும். அந்த முன்னோர்களின் திருவுருவப் படத்திற்கு முன்பாக, ஒரு செம்பு பாத்திரத்திலோ அல்லது செம்பு சொம்பிலோ தண்ணீர் ஊற்றி, அதில் கொஞ்சம் வெட்டி வேரையும் சேர்த்து வைக்க வேண்டும். பஞ்ச பாத்திரத்தில் ஊற்றி வைக்கும் தண்ணீர் கிடையாது. இது பித்ருக்களுக்கு என்று, அவர்களின் திருவுருவப் படத்திற்கு முன்பு, தனி பாத்திரத்தில் வைக்க வேண்டிய தண்ணீர். தினம்தோறும் அந்த தண்ணீரை மாற்றி வைக்க வேண்டியது அவசியம். வெட்டிவேரை மாதம் ஒருநாள் மாற்றினாலும் தவறு இல்லை. முடிந்தால் சந்தன கட்டை இழைப்பார்கள் அல்லவா?

அந்த சந்தன கட்டையும், சந்தனத்தையும் சிறிய அளவில் ஒன்று வாங்கி முன்னோர்களின் திருவுருவப் படத்திற்கு முன்பாக வைப்பது அதிகப்படியான நன்மையைத் தரும். தினம்தோறும் பூஜை அறையில் இறைவனுக்கு தீபம் ஏற்றி தூபம் காட்டி வழிபாடு செய்வோம். இது ஒரு பக்கம் இருக்கட்டும். தினசரி வழிபாட்டோடு சேர்த்து, தனியாக ஒரு தூபம் ஏற்றி, முன்னோர்களின் பெயரைச்சொல்லி முன்னோர்களுக்காக அந்த ஊது வத்தியை, முன்னோர்களின் திருவுருவப் படத்திற்கு மட்டும் காட்டி, அவர்களது பெயரைச் சொல்லி மனதார அவர்களின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும். ‘எங்களுடைய குலத்தை காக்க வேண்டிய பொறுப்பு உங்கள் இடத்திலும் உள்ளது. தீராத துயரங்களும், எதிர்பாராத வரும் கஷ்டங்களும் கூட, எங்கள் வீட்டில் இருப்பவர்களை பாதிக்கக்கூடாது.

நாங்கள் அறிந்தும் அறியாமலும் செய்யும் தவறுகளை மன்னித்து, உங்களின் அருளாசியை வழங்க வேண்டும்’. என்றவாறு மனதார வேண்டிக்கொண்டு, அந்த ஊதுவத்தியை அவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதாவது அவர்களின் திருவுருவப் படத்திற்கு முன்பு, தனியாக ஒரு ஊதுவத்தி ஸ்டாண்ட் வைத்து, அவர்களுக்கு மட்டும் இந்த தூபம் இருக்கவேண்டும். தினம் தோறும் வீட்டில் இருக்கும் பெண்கள் தினசரி பூஜை வழிபாட்டோடு சேர்த்து, மனதார இந்த முன்னோர்கள் வழிபாட்டையும் செய்து வரும் பட்சத்தில், ஒரு வீட்டிற்கு தீராத கஷ்டம் என்பதே வராது என்று உறுதியாக சொல்லலாம். பித்ரு தோஷம், பித்ரு சாபம் இப்படிப்பட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வரும் எத்தனையோ குடும்பங்களை இன்று நாம் காண்கின்றோம். அவர்கள் எல்லாம் கூட, இந்த வழிபாட்டை தினந்தோறும் செய்து வரும் பட்சத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து வரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.