முருக பெருமான் தனக்கு நிகராக குரு பகவானை திருச்செந்தூரில் வழிபட சொன்னதன் காரணம் உங்களுக்கு தெரியுமா ??

சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்வதற்காக சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர் தான் முருகப்பெருமான். தேவர்களையும், முனிவர்களையும் வெகுகாலமாக அச்சுறுத்தி வந்த சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் என்னும் அரக்கர்களை அழிப்பதற்காக முருகர் அவர்களுடன் போர் புரிய துவங்கினார். அந்தப் போரில் முருகப் பெருமான் வெற்றி கொண்டது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. ஆனால் இந்த போரில் முருகப்பெருமானுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கியது குரு பகவானாவார். அதன் காரணமாக முருகர் என்ன கூறினார்? என்று இப்பதிவில் காண்போம். சூரபத்மனுடன் நடந்த போரில் வெற்றி பெற காரணமாக இருந்த குருபகவானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திருச்செந்தூர் கோவிலில் முருகர் ஞான குருவாக இங்கு வீற்றிருக்கிறார். அவருக்கு செய்யும் வழிபாடு முறைகள் அனைத்தும் குரு பகவானுக்கும் செய்ய வேண்டும் என்று அருள் புரிந்தார். இங்கு பக்தர்கள் முருகரையும், குரு பகவானையும் வழிபடுகின்றனர்.

உங்களுடைய ஜாதகத்தில் குருவின் கோட்சார நிலை வலுவிழந்து காணப்படும் பொழுது திருமணத்தில் தடை மற்றும் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதனை நிவர்த்தி செய்வதற்கு திருச்செந்தூரில் இருக்கும் குருபகவானை வழிபட்டு செல்வதால் நல்ல பலன் காணலாம். குரு பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள குருவிற்குரிய பரிகாரங்கள் இத்தலத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் தான் திருச்செந்தூர் முருகனுக்குரிய ஸ்தலமாக மட்டுமல்லாமல், குரு ஸ்தலமாகவும் பார்க்கப்படுகிறது. இங்கே வீற்றிருக்கும் எம்பெருமான் முருகன் குழந்தை வடிவில் சிரித்த முகத்துடன் இருப்பதால், குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு பெரும்பாலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையான தலமாக இத்தலம் விளங்குகிறது.

குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் திருச்செந்தூர் முருகப் பெருமானை இங்கு இருக்கும் கடலிலும், நாழி தீர்த்தத்திலும் நீராடி விட்டு, அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த தலத்தில் மிகப்பெரிய மகான்கள் ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் உபதேசம் செய்து வந்ததால் கல்வியில் வெற்றி பெறவும் இங்கு மாணவர்கள் வேண்டிக் கொள்கின்றனர். கல்விக்கு முக்கியத்துவம் தரும் தலமாகவும் இத்தலம் சிறந்த விளங்குகிறது. வியாழக்கிழமைகளில் திருச்செந்தூர் சென்று அங்கு இருக்கும் கடலில் நீராடி விட்டு, நாழிக் கிணற்றிலும் நீராடி முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் குரு பகவான் நல்ல பலன்களை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.


அதுமட்டுமல்லாமல் இக்கோவிலில் முருகனுக்குரிய மந்திரங்களையும், குரு பகவானுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, அர்ச்சனை செய்து கோவிலை சுற்றி ஒன்பது முறை வலம் வந்தால், தொழில் பிரச்சனைகள், வியாபார ரீதியான பிரச்சனைகள் தீரும். உயர் பதவிகள் கிடைக்கும். இல்லத்தில் பொன், பொருள் சேரும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இங்கு வீற்றிருக்கும் குருதட்சிணாமூர்த்தி ஆமை மேல் காட்சி அளிப்பதால் இவருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் செல்வ வளம் பெருகும், மனோபலம் கூடும் என்றும் கூறப்படுகிறது. இங்கு குரு பெயர்ச்சியின் பொழுது மிகவும் விசேஷமான பூஜைகள் செய்யப்படுகிறது. திருச்செந்தூரில் இருக்கும் நாராயண பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வரும் வழியில் கோவில் சுவரில் துளை வழியே ‘ஓம்’ என்னும் பிரணவ ஒலியை கேட்பது சிறப்பம்சமாக உள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த திருசெந்தூர் முருகனையும், குரு பகவனையும் வழிபடுவது நல்ல பலன் தரும்.