மொத்தமா இருபது நிமிசத்தில் உங்க ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யலாம் !! உங்க வீட்டு பிரிட்ஜ் எப்போதுமே நாற்றம் வீசாமல் இருக்க சின்ன டிப்ஸ் !!

இன்றைய காலகட்டத்தில் ஃப்ரிட்ஜ் என்பது எல்லோர் வீடுகளிலும் இருக்கக்கூடிய, ஒரு அத்தியாவசியமான பொருள் ஆகிவிட்டது. ஃப்ரிட்ஜ் இல்லாத வீடே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த பிரிட்ஜை நம்மில் சில பேர் மட்டும்தான் சுத்தமாக பயன்பாட்டில் வைத்திருக்கின்றோம். ஆனால் பலபேர், பிரிட்ஜை சுத்தப்படுத்துவதே கிடையாது. இதற்கு காரணம் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய அதிகப்படியான நேரம் எடுக்கும் என்பதால்தான். மொத்தமாக 20 நிமிடங்கள் செலவு செய்தாலே போதும். நம் வீட்டு பிரிட்ஜ் பளபளப்பாக மாறிவிடும். உங்கள் வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜை சுலபமான முறையில், குறைவான நேரத்தில் எப்படி சுத்தம் செய்வது? அதை சுத்தம் செய்ய என்னென்ன பொருட்களை பயன்படுத்த வேண்டும்? உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜ் எப்போதுமே துர்நாற்றம் அடிக்காமல் இருக்க வேண்டும் என்றால், அந்த ப்ரிட்ஜுக்குள் வைக்க வேண்டிய பொருள் என்ன?

என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் இருக்கும் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து வெளியில் வைத்துவிட்டு, முதலில் ஃப்ரிட்ஜை ஸ்விட்ச்ஆஃப் செய்து, பிளகையும், பிளக் பாயிண்டில் இருந்து, எடுத்துவிடவேண்டும். அதன் பின்பு, உங்கள் ஃப்ரிட்ஜில் இருக்கும் ட்ரே, ஃபிரிட்ஜ் டோரில் இருக்கும் ட்ரே, இவ்வாறு எதையெல்லாம் கழட்ட முடியுமோ அதை எல்லாம் கழட்டி தனியாக வைத்து, பாத்திரம் தேய்ப்பது போல் தேய்த்து, அலம்பி வெயிலில் காய வைத்து விடுங்கள். இப்போது ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஒரு டம்ளர் தண்ணீர், 1/2 டம்ளர் வினிகர், சிறிதளவு எலுமிச்சை பழச் சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் சோடா உப்பு, இவை மூன்றையும் போட்டு நன்றாக கலக்கி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஃப்ரிட்ஜ் இப்போது காலியாக இருக்கிறது அல்லவா? ஸ்பிரே பாட்டிலிலை வைத்து, ஃப்ரிட்ஜ் முழுவதும் இந்த ஸ்பிரேவை அடித்து விடுங்கள்.

மூலை முடுக்கு எல்லா இடத்திலும் அடித்து விட்டு, ஒரு காட்டன் துணியை கொண்டு துடைக்க ஆரம்பித்தாலே போதும். காட்டன் துணி அழுக்கானால், அப்பப்ப நல்ல தண்ணீரில் அலசி பிழிந்து துடைத்துக் கொள்ளவேண்டும். உங்கள் கையில் பல் தேய்க்கும் பிரஷ் ஒன்றையும் வைத்துக் கொள்ளுங்கள். ஃப்ரிட்ஜ் டோரை சுற்றி இருக்கும் ரப்பர் பகுதியை சுத்தம் செய்ய பிரஷ் தான் சுலபமாக இருக்கும். எந்த ஒரு நாரை போட்டும் அழுத்தமாக துடைத்து கஷ்டப்படவே வேண்டாம். உங்கள் ஃப்ரிட்ஜில் இருக்கும் தேவையற்ற அழுக்கும், கறைகளும் இந்த லிக்விடை ஸ்ப்ரே செய்த பின், இரண்டு, மூன்று நிமிடங்கள் ஊறினால் மட்டுமே போதும். ஃப்ரிட்ஜ் சுத்தமாக மாறிவிடும். வாசனையாகவும் மாறிவிடும். ஃப்ரிட்ஜின் பின்பக்கம், வெறும் துணியை கொண்டு தூசு தட்டிக் கொள்ளுங்கள். ஈரத் துணியை போட்டு பிரிட்ஜின் பின்பக்கத்தை துடைக்கக் கூடாது.

இறுதியாக ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் சோடா உப்பு 4 டேபிள்ஸ்பூன், அளவு போட்டு, ரோஸ் எசன்ஸ், பைனாப்பிள் எசன்ஸ் எதுவாக இருந்தாலும் அதை, அந்த சோடா உப்பில், 2 சொட்டு விட்டு விடுங்கள். அந்த டப்பாவை உங்கள் ஃப்ரிட்ஜின் ஏதாவது ஒரு ஓரத்தில், வைத்து விடவேண்டும். பிரிட்ஜைத் திறந்து பொருள் எடுக்கும் போது, உங்கள் கைபட்டு டப்பா கீழே கொட்டிவிடக் கூடாது. அந்த அளவிற்கு பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். டப்பாவை மூடக்கூடாது. நீங்கள் வைத்திருக்கும் அந்த டப்பா, திறந்திருக்கும் பட்சத்தில், அந்த வாசம் உங்கள் ஃப்ரிட்ஜ் முழுவதும் பரவி, எப்போதும் உங்களுடைய பிரிட்ஜ் வாசனையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சில பேர் வீட்டு பிரிட்ஜை திறந்தாலே, அதில் ஒரு வகையான துர்நாற்றம் வீசும். அதற்கு இந்த டிப்ஸை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் வீட்டில் பஞ்சு இருந்தால் கூட, அதில் ஏதாவது ஒரு எஸன்ஸில் நினைத்து, அதை ஒரு டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் ஒரு ஓரத்தில் வைத்துக் கொள்ளலாம். சாப்பாட்டு பொருட்களில் போடக்கூடிய எஸன்ஸை மட்டும் பயன்படுத்துங்கள். உங்களுக்கு இந்த குறிப்புகள் பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும், ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்!