வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு இப்படி வழிபாடு செய்தால் உங்கள் துன்பங்கள் எல்லாம் தூள்தூளாகி விடும் !!

நம்மை சுற்றி இருப்பவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என்று யாரும் செய்யாத ஒரு விஷயத்தை இந்த நாளும், கோளும் நமக்கு செய்யும் என்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு நாளாக இருப்பது ‘தேய்பிறை அஷ்டமி’. பைரவருக்கு வழிபாடு செய்ய அஷ்டமி நாள் மிகவும் சிறந்த நாளாக இருந்து வருகிறது. அதில் இந்த தேய்பிறை அஷ்டமி இன்னும் அதிக சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. வரும் பதினோராம் தேதி செவ்வாய் கிழமையில் தேய்பிறை அஷ்டமி வருவதால் அந்த நாளில் நீங்கள் என்ன செய்தால்? என்ன பலன்களை அடையலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் நிறைய வழிபாடு முறைகள் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக கடன் பிரச்சனை நீங்குவதற்கு பரிகாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை தரிசனம் செய்த பின்னர், உங்கள் கடன் தொகையில் இருந்து சிறு தொகையை மட்டும் திருப்பி செலுத்தி விட்டு வந்தால் முழு கடன் தொகையும் மிக விரைவாக அடைந்து விடும் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமியில் வரும் ராகு காலத்தில் பைரவரை நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றி, மந்திரம் ஜெபித்து வழிபாடு செய்தால் மனபயம் நீங்கி தைரியம் உண்டாகும். பைரவரை வழிபடுவது என்பது எம்பெருமான் ஈசனை வழிபடுவதற்கு சமமாக கருதப்படுகிறது. செவ்வாய் கிழமை அன்று இந்த முறை தேய்பிறை அஷ்டமி வருவதால் ராகுகால நேரம் 3 லிருந்து 4.30 மணியாக இருக்கிறது. இந்த நேரத்தில் பைரவருக்கு வீட்டில் நெய் தீபம் ஏற்றி, பைரவர் மந்திரம் உச்சரிப்பதால் சகல தோஷங்களும் நீங்கி வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பைரவருக்கு உகந்த பூக்களாக தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, செவ்வரளி போன்றவை இருக்கின்றது. இவற்றில் ஏதேனும் ஒரு மலரை கொண்டு அர்ச்சனை செய்ய, தீராத துன்பங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் தூளாகி பஸ்பமாகிவிடும்.

எத்தனையோ பிரச்சினைகள் வாழ்வில் இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் தைரியம் பைரவர் ஒருவரை வழிபடுவதன் மூலமே நமக்குக் கிட்டும். பைரவருக்கு உகந்த நேரமாக உச்சி வேளை, நள்ளிரவு வேளை, ராகு காலமும் அமைந்திருக்கிறது. உச்சி வேளை பொழுதில் பைரவர் சன்னதிக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி, மாலை சாற்றி, சிகப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் எத்தகைய தோஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்பது ஐதீகம். பைரவர் காலடியில் வைத்து எலுமிச்சை ஒன்றை பூஜை செய்து கொண்டு போய் வீட்டில் வைத்துக் கொள்வதால் தரித்திரங்கள், பீடைகள் நீங்கி திருஷ்டி தோஷம் கழியும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. குழந்தை இல்லாத தம்பதிகள் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு முந்திரிகளை மாலையாகக் கோர்த்து அவருக்கு சாற்றி வழிபட்டு வந்தால் விரைவில் பிள்ளைப் பேறு உண்டாகும் என்பது ஐதீகம். மாலையாக இல்லாவிட்டாலும் நிவேதனமாக முந்திரிகளை பைரவருக்கு வைக்கலாம். பைரவரில் பல வகைகள் உள்ளன. செல்வ வளம் பெருக சொர்ண ஆகர்ஷன பைரவரை வணங்கலாம். இது போல் 8 தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் சகல சங்கடங்களும் நீங்கி செல்வ வளம், மனோபலம் பெருகும்.