வாடகை கட்டி நொந்து போய் விட்டீர்களா ?? உங்களுக்கென்று ஒரு வீடு வாங்க என்ன செய்யலாம் ??

எல்லோருக்குமே நமக்கென்று ஒரு வீடு இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அது மிகப்பெரிய தவமாகவும் நிறைய பேருக்கு இருக்கும். வீடு கட்ட மனை இருந்தும், அதில் ஒரு சிறிய வீடு கூட கட்ட முடியாமல் எவ்வளவோ பேர் இருப்பார்கள். பலருக்கு மனையும் இல்லாமல், வீடும் இல்லாமல், வாடகை கட்டியே காலம் போய்க் கொண்டிருக்கும். ஒரு சிலர் பல வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவதை நம் கண் முன்னால் பார்த்திருப்போம். நம்மால் ஒரு வீடு கூட கட்ட முடியவில்லை. இவர்களுக்கு எப்படி இவ்வளவு வீடுகள் கட்டும் வசதி வருகிறது? என்று பலமுறை ஆதங்கப் பட்டிருப்போம். இதற்கு தீர்வு தான் என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள். நம்மிடம் வாடகை எழுதிக் கொடுப்பவர் அதற்கான ஸ்பெல்லிங் கூட தெரியாமல் இருப்பார். ‘வாடகை’ என்பதற்கு பதிலாக ‘வடகை’ என்று எழுதிக் கொடுத்திருப்பார். பல வீடுகள் வைத்திருப்பவர்கள் எல்லாம் மெத்தப்படித்த மேதாவிகள் அல்ல. சாதாரண மனிதர்கள் தான்.

இதற்கு அவர்களுடைய ஜாதகமும், கிரக அமைப்பும் காரணமாக இருந்திருக்கும். ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல காலம் வந்து விட்டால் போதும். அதன் பின் நாம் வேண்ட வேண்டிய தெய்வங்களை சரியாக வேண்டி நமக்கு தேவையான வரங்களை பெற்று விட வேண்டும். அங்கு தான் சூட்சமம் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் மூன்றிலிருந்து நிறைய நபர்கள் வரை இருக்கலாம். யாராவது ஒருவருக்கு தங்களுடைய ஜாதகத்தில் வீடு கட்டும் யோகம் எப்போது வரும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் சரியாக அமைந்து இருந்தால் விரைவில் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும் என்பார்கள். கணவன் மனைவி அல்லது பிள்ளையின் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் உச்சம் பெற்று இருக்கும் சமயத்தில் அவரை வழிபட்டு வந்தால் உடனே உங்களுக்கு யோக காலம் வந்துவிடும். இடம் வைத்திருப்பவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்புகள் உருவாகும். அல்லது மனை வாங்கும் வாய்ப்புகள் நிச்சயம் அமையும்.

செவ்வாய் பகவான் உச்சம் பெற்ற சமயத்தில் இந்த பரிகாரத்தை முறையாக செய்து வாருங்கள். எண்ணிய எண்ணமெல்லாம் எண்ணியபடியே ஈடேறும். செவ்வாய்க்கிழமையில் சூரியனுடன் குரு பகவான் இணைந்திருக்கும் ஓரையில் அதாவது காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக, அதே போல் மதியம் 2 மணியிலிருந்து 3 மணிக்குள்ளாக இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த நேரத்தில் தான் குருவும், சூரியனும் இணைந்திருக்கிறார்கள். முடிந்தவரை நவக்கிரக சன்னதிக்கு சென்ற இந்த பரிகாரத்தை செய்ய பாருங்கள். முடியாதவர்கள் வீட்டிலேயே செய்யலாம். நவகிரக சன்னிதிக்கு சென்று செவ்வாய்கிழமை அன்று இரண்டு நெய் அகல் தீபங்களை ஏற்ற வேண்டும். அங்காரகனுக்கு பிடித்தமான தயிர் சாதம் அல்லது எலுமிச்சை சாதம் ஏதாவது ஒரு சாதத்தை இயலாதவர்களுக்கு தானமாக வழங்க வேண்டும். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கு தானம் செய்யுங்கள். பசியில் வாடும் ஒரு மூன்று பேருக்காவது எலுமிச்சை சாதம் அல்லது தயிர் சாதம் பொட்டலம் கட்டி கொடுக்கலாம். இது போல் வாராவாரம் செவ்வாய்க்கிழமை தோறும் தொடர்ந்து செய்து வர வேண்டும். ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிக்கும் ஒரு சில வாரங்களிலேயே நல்ல முன்னேற்றம் தெரிய வரும். அங்காரகனின் அருள் இருந்தால் வாடகை வீட்டிலிருந்து விரைவாக சொந்த வீட்டிற்கு நாமும் குடிபெயர்ந்து சென்று விடலாம். நீங்களும் தானம் செய்து அவரின் அருளை பெற முயற்சி செய்யுங்கள்.