விதியை மதியால் வெல்லலாம் என்று தெரிந்தால் நீங்கள் வியந்து போவீர்கள் !! சூட்சம ரகசியத்தை கருட புராணம் எப்படி கூறுகிறது தெிரியுமா ??

நாம் என்னதான் பாவங்கள் செய்தாலும் அதற்குரிய தண்டனையை சொர்க்கம், நரகம் என்று மேலோகத்தில் சென்று சில காலம் அனுபவிக்க வேண்டும் என்று கருட புராணம் கூறுவது பற்றி நாம் அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். அறிவாளிகளில் சிலர் விதியை மதியால் வென்று விடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆமாம் அவர்கள் நினைப்பதும் சரி தானே? விதி என்று ஒன்று இருந்தால் அதை ஏன் நாம் மதியால் வெல்ல முடியாது? அதை எப்படி வென்று காட்டுவது என்பதை கருடபுராண பார்வையில் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். கெட்டது செய்தால் கெட்டது தான் நடக்கும் என்று எத்தனை புராணங்கள் கூறினாலும் அதை காது கொடுத்து கேட்க மனிதன் தயாராக இல்லை.

ஏனென்றால் நாம் உயிருடன் இருக்கும் பொழுது எப்படி இருக்கிறோம் என்பதை மட்டும் தான் இப்போது பார்க்கிறோம். செத்து போன பிறகு நல்லா இருந்தா என்ன? நல்லா இல்லன்னா என்ன? என்கிற மனப்போக்கு தான் நிறைய பேருக்கு இருக்கிறது. கருட புராணத்தை படிப்பவர்களுக்கு இந்த மனப்போக்கு நிச்சயம் மாறும். அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயமும் பயங்கரமாகவும் அதே சமயத்தில் மனிதனை சரியான பாதையில் அழைத்துச் செல்லக் கூடியதாகவும் இருக்கிறது. ஒரு சிறுவன் தன் தகப்பனிடம் கேட்கும் கேள்வி இது. ‘அப்பா நாம தப்பு செஞ்சா கடவுள் தண்டிப்பாரா? எப்படி தண்டிப்பார்?’ என்று மழலை ததும்ப கேட்கிறது. அதற்கு அந்த அப்பா கூறுவதை கேளுங்கள். கண்ணா! நாம் செய்யும் ஒவ்வொரு தப்புக்கும் ஒவ்வொரு தண்டனை உண்டு. அதற்கென்றே மேலுலகத்தில் தனி டிபார்ட்மென்ட் வேலை பார்க்கிறது. உனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் குருவை நீ அவமானப்படுத்தினால் அங்கிருக்கும் வேலையாட்கள் உன்னுடைய நாக்கு இடுக்கி வைத்து பிடுங்கி எறிந்து விடுவார்கள்.

அடுத்த வீட்டு பெண்களை மரியாதைக் குறைவாக பார்த்தால், உன்னுடைய கண்கள் அங்குள்ள இரும்பு பறவை ஒன்று தன் நீண்ட அழகால் கொத்திப் பிடுங்கி எறிந்து விடும். யாருக்கும் உணவை பகிர்ந்து கொடுக்காமல் நீ மட்டுமே சாப்பிட்டால், நீ சாப்பிட தகாத உணவுகளை அதாவது மலம், சிறுநீர், ரத்தம் போன்றவை உணவாகக் கொடுப்பார்கள். அதைத்தான் நீ அங்கு சாப்பிட வேண்டும். குரு மற்றும் தெய்வத்தை மற்றவர்கள் அவமதிப்பதை நீ காதால் கேட்டால் தட்டி கேட்க வேண்டும். தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தால் அந்த லோகத்தில் உன்னுடைய காதில் இரும்பு ஆணி கொண்டு அடிப்பார்கள். இல்லாதவர்களிடம் பிச்சை கேட்டால் அடுத்த பிறவியில் நீ நாயாக பிறப்பாய். தீர்த்த குளங்களில் அசிங்கம் செய்தால் கல்லுக்குள் தேரையாய் பிறப்பாய். மிருகங்களை காலால் எட்டி உதைத்தால் உனது கால்கள் வெட்டி எறியப்படும். இப்படி ஒவ்வொரு அநியாய செயல்களுக்கும் நிச்சயம் உனக்கு தண்டனை உண்டு.

நீ அந்த லோகத்தில் இருக்கும் பொழுது உன்னுடன் யாருமே இருக்க மாட்டார்கள், தனியாளாக இருப்பாய் என்று கூறினார். இதை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் மிகவும் அஞ்சி நடுங்கினான். இதைக் கேட்கும் பொழுது நமக்கே சற்று கலங்கத்தான் செய்கிறது அல்லவா? நல்லவர்கள் பூமியில் எவ்வளவு தோல்விகளைச் சந்தித்தாலும் இறுதியில் அவர்கள் சொர்க்கத்தை அடைந்து உண்மையான வெற்றியை சந்தித்து விடுவார்கள். ஆனால் நல்லவர்களை ஏமாற்றிய தீயவர்கள் என்னதான் வெற்றிகளை பூமியில் சந்தித்தாலும் மேலுலகத்தில் கொடுக்கப்படும் தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்ற எதுவும் துணையாக வரப் போவதில்லை என்பதை இப்போதே உணர்ந்தால் தப்பித்தார்கள். இங்கு விதியை மதியால் வெல்வது என்பது சற்றே கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம். நாம் செய்த தவறான விஷயத்தை மதியால் வெல்வது போன்றது அல்ல, இப்போது நாம் எப்படிப்பட்ட கஷ்டமான விதியை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் நாம் நேர் வழியில் நடந்து காட்டினால் அந்த கஷ்டமான விதியை நம் மதியால் இறுதியில் வென்று விட்டதாக அர்த்தம். அதைத்தான் கருட புராணம் எடுத்துக் கூறுகிறது.