வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க தொழிலில் அதிக லாபம் கிடைக்க நில வாசலில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்கள் !!

நம்முடைய வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்க வேண்டும் என்றால், நம் வீட்டு நில வாசல்படியை சுத்தமாகவும், மங்களகரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே! நம் வீட்டில் ஐஸ்வர்யம் பெருக, வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் இருக்க, நில வாசல்படியில் வைக்கும் சில பொருட்களை முறைப்படி எப்படி வைக்க வேண்டும் என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதாவது நில வாசல்படியில் மாயிலை, வேப்பிலை, உப்பு, மஞ்சள் குங்குமம் இவைகளை வைப்பது மிகவும் சிறப்பானது. இருப்பினும் முறைப்படி, சாஸ்திரப்படி இவைகளை எப்படி வைக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

பொதுவாகவே சிலபேர் வீட்டு வாசலில் மாஇலையை கொத்தாக சொருகி வைப்பார்கள். சில பேர் மாயையை தோரணம் கட்டுவார்கள். எப்படி வைத்தாலும் தவறில்லை. இருப்பினும், மாஇலைத் தோரணம் காம்பை உள்பக்கமாக மடித்து சொருகி, மஞ்சள் நூலில் கட்டுவது மிகவும் சிறப்பான ஒரு முறை என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது. அதிலும், குறிப்பாக அந்த மாஇலைகளின் எண்ணிக்கை 16 என்ற எண் கணக்கில் இருக்கலாம். அல்லது 21 என்ற எண் கணக்கில் இருக்கலாம். இப்படி இருக்கும்போது வீட்டில் ஐஸ்வர்யம் அதிகரிக்கும். மாஇலைத் தோரணத்தை, கட்டிய பின்பு, நில வாசல் படியின், இரண்டு பக்கத்திலும் கொத்தாக வேப்பிலை வைக்க வேண்டும். வேப்பிலையானது நம் வீட்டில் கிருமிகளை அண்டவிடாது.

திருஷ்டி கழிய வேண்டும் என்பதற்காக, ஒரு கண்ணாடி பாத்திரத்தில் உப்பு போட்டு நில வாசல்படியில் வைத்தால் நல்லது என்று சொல்வார்கள். அதுவும் சரிதான். அப்படி வைக்கும் பட்சத்தில் நம் வீட்டிற்குள் கெட்ட சக்தியும், கண் திருஷ்டியும், நுழையாது. அந்த உப்பு பாத்திரத்தை நிலவாசல்படிக்கு வலது பக்கம் வைப்பது மிகவும் நல்லது. ஒரு நாள் முழுக்க அந்த உப்பு அங்கே இருக்கும் பட்சத்தில், அடுத்த நாள் அந்த உப்பை எடுத்து தண்ணீரில் கொட்டி விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பழைய உப்பை நில வாசல்படியில் வைக்கக் கூடாது. தினம்தோறும் அந்தக் கிண்ணத்தில், உப்பு மாற்றப்படவேண்டும். நிலவாசல் படிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து தூப ஆராதனை காட்டினால் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும்.

மஞ்சளைக் கொண்டு நில வாசல் கதவில், நடு பகுதியில் ‘ஓம்’ என்ற எழுத்தை எழுதி, அதில் ஒரு குங்குமப் பொட்டு வைத்து விட்டோமேயானால், உங்கள் வீட்டிற்குள் கெட்ட சக்தி எதுவும் நுழையாது என்பது குறிப்பிடத்தக்கது. வீடு ஐஸ்வர்ய அம்சம் நிறைந்ததாகவும் இருக்கும். சில பேர் வீட்டில் தொழில் நன்றாக சென்று கொண்டு இருக்கும். திடீரென்று முடக்கம் அடைந்துவிடும். எதிர்பாராத நஷ்டம் ஏற்படும். வீட்டில் ஐஸ்வர்யம் குறைந்து போகும். பண இருப்பு குறையும். கடன் பிரச்சனை உண்டாகும். இப்படி பல வகைப்பட்ட, பணப் பிரச்சனைகள் ஏற்படும் பட்சத்தில், உங்கள் நில வாசல்படியில், ஒரு குதிரை லாடம் மாட்டி வைப்பது மிகவும் நல்லது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்துமே சின்ன சின்ன குறிப்புகள்தான். நம்பிக்கையோடு செய்து வரும் பட்சத்தில் கைமேல் பலன் உண்டு என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.