21 நாட்களில் நினைத்த எல்லா காரியமும் நினைத்தபடி நிறைவேறும் !! வேல் வழிபாட்டை இப்படி செய்துதான் பாருங்களேன் !!

அழகன் முருகனை அன்பு கலந்த பக்தியோடு, எவர் ஒருவர் உண்மையான வேண்டுதலை மனமுருகி வைக்கின்றார்களோ, அவர்களை எம்பெருமான் என்றைக்கும் கைவிட்டது இல்லை. உங்களுடைய தீராத கஷ்டத்தை தீர்த்து வைப்பதற்கு, அந்த முருகப்பெருமானே, எந்த ரூபத்தில் வேண்டுமென்றாலும் வந்து உதவி செய்வார். உங்களுடைய வீட்டில் வேல் வழிபாட்டை இந்த முறைப்படி செய்து பாருங்கள்! குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சனைகள் தீர, நீண்ட நாளாக இருந்து வரும் நோய் நொடிகள் தீர, குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்க, வீட்டில் செல்வ கடாட்சம் நிலைத்திருக்க, நல்ல வேலை கிடைக்க, சொந்த வீடு கட்ட, இப்படி எந்த வேண்டுதலை வைத்தும் இந்த வழிபாட்டினை நீங்கள் செய்யலாம். இதற்கு முதலில் ஒரு சிறிய அளவிலான வேல் வாங்க வேண்டியது அவசியம்.

இந்த வேலை நம் கைகளால் வாங்குவதைவிட, நம்முடைய குரு, அல்லது நம் வீட்டில் இருக்கக்கூடிய வயது முதிர்ந்தவர்கள், யாராக இருந்தாலும் அவர் கைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். அல்லது கோவிலில் இருக்கக்கூடிய குருக்கள் யாரிடமாவது, பணத்தைக் கொடுத்து அவர்கள் மூலமாக வேல் வாங்கிக் கொள்ளலாம். நம் கையில் இருக்கக்கூடிய பணத்தைக் கொடுத்து, கடைக்கு சென்று நம் கையாலேயே, வேல் வாங்குவதை விட, இப்படி அடுத்தவர்களின் ஆசீர்வாதத்தோடு அந்த வேல் நம்முடைய கைக்கு வருவது மேலும் நல்ல பலன்களைக் கொடுக்கும். இந்த வேலானது பித்தளை, வெள்ளி, தங்கம், பஞ்சலோகம், செம்பு எந்த உலோகத்தில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும். அது அவரவருடைய வசதியைப் பொறுத்தது. இந்த வேலை நம்முடைய வீட்டிற்கு வாங்கி வந்து எப்படி பூஜை செய்வது? செம்பினால் செய்யப்பட்ட ஒரு சிறிய சொம்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த சோம்பு பித்தளையில் இருந்தாலும் பரவாயில்லை, வெள்ளியில் இருந்தாலும் பரவாயில்லை, தங்கத்தில் இருப்பினும் பரவாயில்லை. இதுவும் அவரவருடைய வசதியை பொருத்தது. பூஜை செய்வதற்கு இரும்பு, சில்வர் இந்த இரண்டு பொருட்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தயாராக வைத்திருக்கும் சொம்பின் மேல், மஞ்சள் குங்குமம் வைத்து விட்டு, அதன் பின்பு அந்த சொம்பு நிறைய விபூதியை நிரப்பிவிட்டு, தயாராக இருக்கும் வேலை அந்த விபூதியில் சொருக்கி விட வேண்டும். அதற்குப் பின்பாக அந்த வேலுக்கு சந்தனத்தையும், குங்குமத்தையும் இட்டு விடவேண்டும். வாசனை நிறைந்த பூக்களை வேல் சுற்றி வைத்து விடுங்கள். அதன் பின்பாக உதிரி புஷ்பங்களை வைத்து ‘ஓம் முருகா’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

குறிப்பாக சக்கரை பொங்கலை அல்லது கற்கண்டு சாதம் நெய்வேதியம் வைக்க வேண்டும். 21 நாட்கள் தடையின்றி இந்த பூஜையை நீங்கள் செய்துவிட்டால் உங்களுடைய காரியம் தடையில்லாமல் நிச்சயம் நடக்கும். ஆனால் பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்யவேண்டும் ‘எல்லாம் அவன் தான்’, என்ற மனப்பக்குவம் உங்களுக்கு வர வேண்டும். 21 வது நாள் பூஜையை முடித்துவிட்டு அந்த வேலை முருகன் கோவில் உண்டியலில் சேர்த்து விடவேண்டும். சொம்பில் இருக்கும் விபூதியை தினம்தோறும் நீங்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். இது ஒரு எளிமையான பரிகார முறைதான். நம்பிக்கையோடு செய்தவர்கள் அனைவரும் நல்ல பலனை அடைந்து உள்ளார்கள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.