சாப்பிடும் போது இந்த தவறையெல்லாம் நீங்கள் செய்வீங்களான்னு பாருங்க !! கட்டாயம் தரித்திரமும் கஷ்டமும் உங்களை இருக்க பிடிக்கத்தான் செய்யும் !!

நம்முடைய பழக்க வழக்கமும், நாகரீகமும் மாறிக் கொண்டே வரும் சூழ்நிலையில், நாம் சாப்பிடும் விதமும் மாறிவிட்டது என்றே சொல்லலாம். ஒவ்வொரு பழக்கத்தையும், வளரும் காலகட்டத்திற்கு ஏற்ப, நாம் மாற்றிக் கொண்டே வரும் பட்சத்தில், நமக்கு கஷ்டமும் பின்தொடர்ந்து வருகின்றது என்பதை மறந்துவிடாதீர்கள். சாப்பிடும்போது நாம் செய்யும் சில தவறுகள் என்னென்ன? குறிப்பிட்ட அந்த சில தவறுகளைச் செய்யும் போது நமக்கு என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். எப்போது, டிவி என்ற ஒன்று வந்ததோ, அன்றைக்கே அன்னலட்சுமிக்கு நாம் கொடுக்கும் மரியாதையை சுத்தமாக கொடுப்பதில்லை. நம்முடைய கவனத்தை சாப்பாட்டின் மேல் செலுத்தாமல், தொலைக்காட்சிப் பெட்டியை பார்த்துக்கொண்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டு இருக்கின்றோம். இது அன்ன லட்சுமியை அவமானப் படுத்துவதற்கு சமமாக சொல்லப்படுகிறது. இன்று, நாம் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் பழக்கத்தை சுத்தமாக மறந்துவிட்டோம்.

காரணம், டைனிங் டேபிள். ஆனால், எத்தனை பேருக்கு தெரியும்? தரையில் உட்கார்ந்து சாப்பிட்டால், குறைவான உணவை, நம்முடைய வயிற்றுக்குத் தேவையான உணவை, மட்டும் தான் சாப்பிட முடியும் என்பது! அதுவே நின்று கொண்டோ, இருக்கைகள் மீது அமர்ந்துகொண்டு, சாப்பிட்டாலோ கொஞ்சம் அதிகப்படியான உணவு வயிற்றுக்குள் செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது. அளவான உணவு தான் நமக்கு உடல் ஆரோக்கியத்தை தரும் என்பதையும் கவனிக்க வேண்டும். கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து உணவை சாப்பிடக்கூடாது. இடது கையை கீழே ஊன்றிக் கொண்டு சாப்பிடக்கூடாது. தலையில் கையை வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. தலையைச் சொறிந்து கொண்டு சாப்பிடக்கூடாது. எவ்வளவு பிரச்சனை இருந்தாலும், அழுதுகொண்டே சாப்பாட்டை சாப்பிட கூடாது. இந்த செயல்பாடுகள் அனைத்தும் அன்னபூரணிக்கு அவமானத்தைத் தேடித் தருவதாக சொல்லப்பட்டுள்ளது. கூடவே சேர்ந்து தரித்திரமும் நம்மை தொற்றிக்கொள்ளும். சாப்பிடும் தட்டில் தாளம் போடுவது, கோபத்தோடு சாப்பிடும்போது, சாப்பிட்ட தட்டை தூக்கி வீசுவது, இது போன்ற பழக்கங்களை அறவே தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. முடிந்தவரை வெளியிடங்களுக்குச் சென்று சாப்பிடும் பட்சத்தில் கூட, காலில் இருக்கும் செருப்பைக் கழட்டிவிட்டு சாப்பிடுவது மிகவும் நல்ல பழக்கம். சில பேர் எல்லாம், சாப்பிட்ட தட்டிலேயே கையைக் கழுவி விடுவார்கள்.

ஒரு படி மேலே போய் வாயை கழுவிக் கொப்பளித்துத் துப்புவாங்க!. இதெல்லாம் மிக மிக தவறான காரியம். சிறிய வயதிலிருந்தே உங்களது பிள்ளைகளுக்கு இது தவறு என்று சொல்லிக் கொடுப்பது நல்லது. இன்னும் சில பேர் தங்களுடைய நாக்கை போட்டு, தட்டை துடைத்து சாப்பிடுவார்கள். இதெல்லாம் பெரிய பாவம். தயவுசெய்து செய்யாதீர்கள். சாப்பிட்ட எச்சில் தட்டை, சாப்பிட்ட இடத்திலேயே வெகுநேரம் விட்டுவிடக் கூடாது. அந்த இடத்தில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். சாப்பிட்ட உடன், எழுந்து போய் கையை கழுவ வேண்டும். சில பேர் சாப்பிட்ட தட்டையும், கையையும் காய வைத்துக் கொண்டு அந்த இடத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்து இருப்பார்கள். இது மிகப்பெரிய தவறு. சாப்பிட்ட தட்டை உடனே கழுவி வைப்பது நல்லது முடியாதவர்கள் அந்த தட்டில் கொஞ்சம் தண்ணீராவது ஊற்றி வையுங்கள். காய விடாதீர்கள். இரவு நேரத்தில் எச்சில் தட்டை அப்படியே போட்டு விடக்கூடாது. குழம்பு பாத்திரம், சாப்பாட்டுப் பாத்திரம் எல்லாம் மறுநாள் தேய்த்தாலும் கூட, எச்சில் பாத்திரத்தை அப்பவே தேய்த்துவிட வேண்டும். முடிந்தவர்கள், முடிந்தவரை வாழையிலையில் சாப்பாட்டை சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. முடியாதவர்கள் மாதத்திற்க்கு ஓரிரு நாட்களாவது வாழை இலையில் சாப்பிடும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

குறிப்பாக தலைக்கு குளித்துவிட்டு ஈரத்தலையோடு சாப்பாடு சாப்பிடுவது நம் வீட்டிற்கு பெரிய பண கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. முடிந்தால் சாப்பிட தொடங்குவதற்கு முன்பாக ஒருபிடி அன்னத்தை இறைவனுக்காக என்று எடுத்து ஒதுக்கிவைத்து விட்டு, சாப்பிடுவது இன்னும் நல்ல பழக்கமாக சொல்லப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து தட்டில் சாப்பிடும் போது வலது கையால் சாப்பாட்டை பிசைந்து சாப்பிடுவோம். அப்படி இருக்கும் போது, இடது கையால் அந்த தட்டை பிடித்துக்கொண்டு சாப்பிடும் பட்சத்தில், நம்முடைய வீட்டில் அன்ன லட்சுமியும் லக்ஷ்மி தேவியும் மகாலட்சுமியும் நிலைத்திருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இதோடு தேவையான சாப்பாட்டை மட்டும் தட்டில் போட்டுக் கொண்டு சாப்பிடும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அனாவசியமாக சாப்பாட்டை வீணாக்கக் கூடாது. மீறி சாப்பிட முடியாமல் தட்டில் மீதம் வைத்தாலும், அந்த சாப்பாட்டை தட்டில் இருந்து உடனே அகற்றிவிடவேண்டும். தட்டிலேயே வைத்து காய விடுவது வீட்டிற்கு தரித்திரத்தை தேடித்தரும். முடிந்தவரை தினம்தோறும் சாப்பாடு சாப்பிடும்போது, ஒரு சொட்டு நெய் சேர்த்து சாப்பிடுவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை தேடித் தரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சாப்பிடும் போது கீழே சிந்திய சாதத்தை எக்காரணத்தைக் கொண்டும் துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்யாதீர்கள் கைகளால் சுத்தம் செய்வது தான் நல்லது. அதன் பின்பு அந்த இடத்தை தண்ணீர் தெளித்து துடைப்பது நல்லது சாப்பிட்ட இடத்தை, துணி போட்டு துடைக்காமல் கால்களால் மிதிக்க கூடாது. சாப்பிடுகின்ற சாப்பாட்டிற்கு இத்தனை விதிமுறைகளா! என்று மலைத்துப் போக வேண்டாம். இதெல்லாம் நாம் கடைப்பிடித்து வந்தது தான். இடையே சில காலமாக, சில பேர் மறந்து விட்டார்களே தவிர, இவை ஒன்றும் புதியதாக சொல்லப்படும் சாஸ்திர குறிப்புகள் எல்லாம் இல்லை.