5 பைசா செலவு இல்லாம வீட்டிலேயே உரம் தயாரிச்சி போடுங்க, உங்க செடிகள் எல்லாத்திலும் பெரிசுபெரிசா பசுமையா பூக்கள் பூக்கும் !!

எல்லாருக்குமே செடி வளர்க்க ஆசை தாங்க. ஆனா ஆசை ஆசையாய் செடி வாங்கி வீட்டில் வைத்து வளர்த்து வந்தா கொஞ்ச நாளிலேயே பட்டு போயிடுது. இதனாலேயே செடி வளர்க்கிற ஆசையும் பலபேருக்கு போயிருக்கும். உங்கள் செடியில் பெருசு பெருசா பூக்கள் பூத்துக் குலுங்க, நல்ல நிறத்துடன் பூக்க, பூச்சிகள் தொந்தரவு இல்லாமல் இருக்க நிச்சயமா நீங்க ஏதாவது ஒரு உரம் செஞ்சு போட்டு தான் ஆகணும். ஏதோ வாங்கிட்டு வந்தோம், வெச்சோம், வளர்த்தோம்னு இருந்தா கண்டிப்பா பூக்கள் அதிகமா பூக்காது. எந்த செலவும் இல்லாமல் வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்கலாம். இது உங்களுக்கு நிச்சயம் புதுசா தான் இருக்கும். அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம் வாருங்கள். அஞ்சு விதமா நீங்க உரம் தயாரிக்கலாம். இந்த அஞ்சு பொருளுமே செடிகளுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை இயற்கையான முறையில் கொடுக்கும் ஆற்றல் படைத்தது. அஞ்சு பொருளுமே நம்ம வீட்ல யூஸ் பண்ற சாதாரண பொருட்கள் தான்.

அதை எப்படி காய வச்சி எப்படி உரமாக மாற்ற முடியும் என்பதை தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த ஐந்து உரங்களையும் தனித்தனியாக செய்து பின் ஒன்றாக கலந்து நீங்கள் ஸ்டோர் பண்ணி வைத்துக் கொண்டால் போதும். தேவைப்படும் பொழுது உபயோகித்து அதன்மூலம் அளவற்ற பலன்களை நீங்கள் பெறலாம்.முதலில் நாம் பார்க்க இருப்பது வாழைப்பழத் தோல். வாழைப்பழத் தோல் பொதுவாக செடிகளுக்கு ஊறவைத்து அதன் தண்ணீரை ஊற்றுவார்கள். நாம் அப்படி செய்யப்போவது இல்லை. வாழைப்பழத் தோல்களை சேகரித்து அதனை வெயிலில் நன்றாக உலர்த்தி காய வைத்துக்கொள்ளுங்கள். காஞ்சு கருவாடா ஆனபிறகு அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள். அதில் இருக்கும் காம்பை மட்டும் நீக்கிவிடுங்கள். பின்னர் மிக்ஸியில் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த உரத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், சோடியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் உங்கள் செடிகளுக்கு அதிக சத்து கிடைத்து பெரிய பெரிய பூக்கள் பூக்கும், கனிகள் பெரிதாக காய்க்கவும், காய்களை வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. இரண்டாவது உரம் தேயிலை பொடி.

நாம் டீ குடித்துவிட்டு வீணாக தூக்கி எறியும் டீத்தூள் பவுடரை சேகரித்து வெயிலில் நன்றாக உலர்த்திக் கொள்ளுங்கள். நன்கு காய்ந்ததும் ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வையுங்கள். இந்த உரத்தில் அதிக அளவு நைட்ரஜன் இருப்பதால் செடிகள் பச்சையாக பசுமை மாறாமல் இருக்கும். செடிகளின் இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறுவது நைட்ரஜன் குறைபாட்டால் தான். அதனால் இந்த உரம் அந்த குறைபாட்டை நீக்கி செழிப்பை கொடுக்கும். மூன்றாவது உரமாக முட்டை ஓட்டை பயன்படுத்தி செய்யலாம். முட்டை ஓட்டை நீங்கள் அப்படியே போடக்கூடாது. அப்படி நீங்கள் முட்டை ஓட்டை போடும் பொழுது அதிலிருக்கும் ஈரப்பதத்தால் பூஞ்சை உருவாகக்கூடும். முட்டை ஓடுகளை சேகரித்து அதை நன்றாக வெயிலில் உலர்த்தி காய்ந்ததும் அதையும் மிக்ஸியில் போட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அரைத்துக்கொள்ளுங்கள். முட்டை ஓட்டில் நைட்ரஜன், பாஸ்பாரிக் ஆசிட், கால்சியம் ஆகிய சத்துக்கள் இருப்பதால் செடிகளில் பூக்கும் மொட்டுக்கள் உதிராமல் காக்கும். செடிகளின் தண்டு பகுதிகளை பலமாக்கும் அதுமட்டுமில்லாமல் காய்கறிகள் அழுகுவதை தடுக்கும் ஆற்றல் படைத்தது.

நான்காவது விதமாக நாம் பார்க்க இருப்பது சாம்பல். முந்தைய காலங்களில் வீட்டில் விறகு அடுப்பு வைத்திருப்பார்கள். சாம்பலுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் இப்போது அது சற்று கடினம் தான். நீங்கள் கடைகளில், அல்லது ஹோட்டல்களில் கேட்டு வைத்தால் கொடுப்பார்கள். அந்த விறகின் சாம்பல் மிகவும் சத்துள்ளது. அதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் கார்பனேட் சத்துக்கள் காய்கறி மற்றும் பழங்களை தரமானதாகவும், பெரிதாகவும் வளரச் செய்யும். பூச்செடிகளும் பூக்கள் பெரிது பெரிதாக பூப்பதற்கு உதவியாக இருக்கும். இந்த உரம் நமக்கு அதிகமாக தேவையில்லை. கொஞ்சம் இருந்தாலே போதும். இறுதியாக மாட்டு சாணத்தை நாம் பயன்படுத்த இருக்கிறோம். மாட்டுச்சாணம் உரமாகப் போடும் பொழுது அதைவிட வேறு எந்த உரமும் தேவைப்படுவதில்லை. விவசாயத்திற்கு அதிகம் பயன்படுகிறது. அந்த அளவுக்கு சத்துக்கள் நிறைந்த மாட்டுச் சாணத்தை உலர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் NPK எனப்படும் இயற்கை உர கலவை அதிக சத்துக்கள் நம்முடைய செடிகளுக்கு கொடுக்கும். இந்த ஐந்து உரத்தையும் ஒன்றாக கலந்து ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். தினமும் ஒரு செடிக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து வேர் பகுதியை சுற்றிலும் போட்டு தண்ணீர் ஊற்றி வந்தாலே போதும். எந்த எந்த செடிகளுக்கு எந்தெந்த சத்துக்கள் தேவைப்படுகிறது? என்பதை பார்த்து அதற்கேற்ப நீங்கள் உரங்களை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதுபோல உரம் செய்து கொள்வது ஒன்றும் கடினமான வேலை இல்லை. ஒரு முறை செய்து வைத்தால் 6 மாதம் வரை வரும். உங்கள் செடிகள் செழித்து செழுமையாக அதிக பூக்கள், காய், கனிகள் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. பயன்படுத்தி பலன் பெறுங்கள்.