ஆடி செவ்வாய் ஆடி வெள்ளி ஆடி ஞாயிறு !! முறையான அம்மன் வழிபாட்டை இப்படி செய்தால் உங்களுக்கு வாழ்கையில் எந்த கஷ்டமும் வராது !!

பொதுவாகவே ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் விசேஷமானது. ஆடி மாத அம்மன் வழிபாட்டை வீட்டிலிருந்தபடியே எப்படி முறையாக செய்து? அம்மனின் அருள், ஆசியை முழுமையாக எப்படி பெறுவது? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆடி செவ்வாய் என்பது, கோவில்களுக்கு சென்று அம்மனை முறைப்படி வழிபட வேண்டிய தினம். ஆடி வெள்ளி என்பது, நம் முன்னோர்களோடு சேர்த்து அம்மனை வழிபடவேண்டிய தினம். ஆடி ஞாயிறு என்பது, அன்னதானத்திற்கு உகந்த தினம். இந்த மூன்று தினத்தினுடைய சிறப்பு வழிபாட்டினை பற்றித்தான் விரிவாக காணப் போகின்றோம். இன்றைய சூழ்நிலை நாம் எல்லோரும் கோவிலுக்கு செல்ல முடியாமல் இருக்கின்றோம். இதனால், ஆடி செவ்வாய்க்கிழமை அன்று நம் வீட்டிலேயே, அம்மனை மாவிளக்கு ஏற்றி வழிபடுவது, நம்முடைய குடும்ப ஒற்றுமைக்கு மிகவும் உகந்தது என்று சொல்லப்பட்டுள்ளது.

அரளிப்பூ கிடைத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் எந்த அம்மன் படமாக இருந்தாலும், அந்த அம்மனுக்கு அணிவித்து தீபமேற்றி, உங்கள் வீட்டு முறைப்படி மாவிளக்கு செய்து, நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். கண்டிப்பாக, உங்கள் வீட்டு குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அடுத்ததாக ஆடிமாதம் வரும் வெள்ளிக்கிழமை. இதில் அம்மனோடு சேர்த்து, நம்முடைய வீட்டில் கன்னிப்பெண்களாக யாராவது இறந்திருந்தால், அவர்களையும் நினைத்து வீட்டில் பூஜை செய்யலாம். அது நம் குடும்பத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் வேப்ப மரம் இருக்கும்பட்சத்தில், அந்த மரத்தை தெய்வமாக நினைத்து, மஞ்சள் குங்குமம் வைத்து அகல் தீபம் ஏற்றி வழிபட்டால் மிகவும் நல்லது. வீட்டில் வேப்பமரம் இல்லாதவர்கள், வேப்பமரத்திலிருந்து வேப்பமர சிறிய கிளையை பறித்து, வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில், ஒரு சிறிய பித்தளை சொம்பில், முழுமையாக தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் மஞ்சள் பொடி போட்டு, கொண்டுவந்திருக்கும் வேப்பங் கிளைகளை, அந்த தண்ணீரில் சொருகி வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் அம்மனே வந்து குடி கொண்டதாக அர்த்தம் ஆகிவிடும். அதன்பின்பு, உங்களால் என்ன கலவை சாதம் பிரசாதமாக செய்ய முடிந்தாலும் சரி. அதை சமைக்கலாம். எள் சாதத்தை தவிர மத்த கலவை சாதத்தை அம்மனுக்கு படைக்கலாம்.

வெறும் சர்க்கரைப் பொங்கல் மட்டும் செய்ய முடிந்தால் கூட போதும். இதோடு சேர்த்து துள்ளு மாவு, பானகம், இளநீர் இவைகளை, வாழை இலையில் அம்மனுக்கு நெய்வேத்தியமாக படைத்து அம்மனையும், நம்முடைய முன்னோர்களையும் சேர்த்து மனதார வழிபாடு செய்யும் பட்சத்தில் நம்முடைய வீடு சுபிட்சம் அடையும். அம்மனுக்காக படைத்திருக்கும் இந்த இளநீரை மட்டும் நாம் பருகக் கூடாது. மற்றபடி எல்லா பிரசாரங்களையும் நாம் சாப்பிடலாம். இளநீர் தண்ணீரை மரத்தின் அடியில் ஊற்றி விடலாம். சில பேர் வீடுகளில் இந்த ஆடிவெள்ளியில் தங்கள் குடும்பத்தில் கன்னிப் பெண்களாக இறந்தவர்களை நினைத்து, அவர்களுக்கு புதிய ஆடை மஞ்சள், குங்குமம், வளையல், பொட்டு, ரிப்பன் என்று பொருட்களை பூஜை அறையில் வைத்து படைத்து, அவர்களை மறக்காமல் பூஜை செய்து வருவார்கள். அவர்களுக்கு படைத்த அந்த பொருட்களை எல்லாம், சிறு வயதில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு தானமாக கொடுப்பது இன்னும் சிறப்பு. இது குடும்பத்திற்கு மிக மிக நல்லது என்று சொல்கிறது சாஸ்திரம். அடுத்ததாக, ஆடி ஞாயிற்றுக்கிழமை. இந்த தினத்தில் நாம் அம்மனுக்கு கூழ் காய்ச்ச உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து, ஆடி ஞாயிறு, அன்னதானத்திற்கும் உரிய தினம்.

கூழ் மற்றும் பதார்த்தங்களையும் வீட்டில் சமைக்க வேண்டும். முருங்கைக்கீரை, காராமணி குழம்பு, வாழைக்காய், கத்திரிக்காய், இவைகளோடு சில பேர் வீடுகளில் கொழுக்கட்டையும் செய்வார்கள். இவைகளை சமைத்து ஏழை எளிய மக்களுக்கு கூழுடன் சேர்ந்த பதார்த்தத்தை தானமாக அளிக்கும் பட்சத்தில், பல மடங்கு புண்ணியம் நம் குடும்பத்திற்கு சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு எந்த வாரம் உகந்த வாரமாக இருக்கின்றதோ, அந்த வார செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் அம்மனை இவ்வாறு வழிபாடு செய்யலாம். இந்த ஞாயிறு தான், இந்த வெள்ளி தான், இந்த செவ்வாய் தான், வழிபட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. 5 வாரங்களில் வரும் கிழமைகளில் உங்களுக்கு எந்த வாரம் உகந்ததாக உள்ளதோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இதேபோல் ஒரே வாரத்தில் வரும் மூன்று கிழமைகளில் தான் செய்யவேண்டுமா? என்று குழம்ப வேண்டாம். முதல் வாரம் செவ்வாய்க்கிழமை மாவிளக்கு போடலாம். இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமை நெய்வேத்திய வழிபாடு செய்யலாம். அப்படி மாற்றிக் கொண்டு செய்வதினாளும் எந்த ஒரு தெய்வக் குற்றமும் ஏற்படாது. எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் முழு மனதோடு செய்யும் பட்சத்தில் அதற்கான பலனை நம்மால் முழுமையாக அடைய முடியும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து, ஆடி மாத வழிபாட்டின் மூலம் எல்லோருக்கும் அம்மனின் அருளாசி கிடைக்க வேண்டுதல் வைத்து, இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.