முருங்கைக்காய் மரம் வீட்டின் முன் வளர்ப்பது சரியா ?? முருங்கையை வளர்த்தால் வெறுங்கையோடு போவது என்று சொல்வது என்ன ??

முருங்கை மரத்தை எல்லோரது வீட்டிலும் விரும்பி வளர்க்கும் மரமாக இருந்து வருகிறது. முருங்கை மரம் இல்லாத வீடுகள் குறைவு தான் என்று சொல்லும் அளவிற்கு, அனைவரது வீட்டிலும் முருங்கை மரம் நிச்சயம் இருக்கும். ஆனால் இந்த முருங்கை மரத்தைப் பற்றிய சில பழமொழிகள் தவறாக திரிக்கப்பட்டுள்ளன. முருங்கை மரத்தை உண்மையில் வீட்டில் வளர்க்கலாமா? அது நல்லதா? கெட்டதா? ஏன் வளர்க்கக் கூடாது? என்பதைப் பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். முருங்கை மரம் வளர்ப்பது மிக மிக நல்ல விஷயம் தான். முருங்கையை வளர்த்தவன் வெறுங்கையோடு போவான் என்பது பழமொழி.

ஆனால் இதைப் பலரும் பலவிதமாக திரித்துக் கூறப் போய் முருங்கை மரத்தை வளர்க்க கூடாது என்கிற வாதம் வந்து விட்டது. முருங்கை மரத்தை வளர்த்தால் அதில் இருக்கும் இலை முதல் பட்டை வரை அனைத்துமே மூலிகை தான். ஒவ்வொன்றும் மனிதனுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க உதவக் கூடியது. இத்தகைய முருங்கையை வளர்ப்பவர்கள் வயதான காலத்தில் கோலூன்றி நடக்காமல் கம்பீரமாக நடக்கலாம் என்பதை உலகிற்கு எடுத்து உரைக்கவே இந்த பழமொழி தோன்றியது. ஆனால் பழமொழியை சரியாக புரிந்து கொள்ளாத சிலர் தவறாக புரிந்து கொண்டு தவறான அர்த்தம் பரப்பி விட்டார்கள். அவ்வளவு தானே தவிர இந்த பழமொழிக்கும் முருங்கை மரத்தை வளர்க்க கூடாது என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தாராளமாக எல்லோரது வீட்டிலும் முருங்கை மரத்தை வளர்த்து வரலாம். முருங்கை மரத்தில் இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் நமது அன்றாட உணவில் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. வாரம் இருமுறை முருங்கைக் கீரை சாப்பிடுபவர்களுக்கு இளமையுடன் வாழக்கூடிய வரம் கிடைக்கும் என்பார்கள். அதை வீட்டிற்கு முன் ஏன் வளர்க்கக் கூடாது? என்று கூறுகிறார்கள் தெரியுமா? முருங்கை மரம் என்பது வலுவில்லாத எளிதில் முறிந்து விடக்கூடிய மரமாக இருக்கிறது. அதனால் முருங்கை மரத்தை வீட்டின் முன்னால் நாம் வளர்த்தால் எப்போது வேண்டுமானாலும் முறிந்து வீட்டின் மேல் விழுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. குறிப்பாக மழைக் காலங்களில், அதிக காற்றுடன் வானிலை இருக்கும் பொழுது எளிதாக முருங்கை மரம் முறிந்து விழுந்து விடும்.

இதனால் தான் அதனை வீட்டின் முன் பக்கம் வளர்க்காமல், பின் பக்கமாக வளர்த்தால் ஆபத்து இருக்காது என்று கூறப்படுகிறது. அதில் குறிப்பிட்ட காலங்களில் நிறைய கம்பளிப் பூச்சிகள் வாழக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை உண்டாக்கும். அதன் முல் போன்றிருக்கும் முடி உடம்பில் பட்டாலே உடம்பு முழுவதும் தடித்து அரிப்பு உண்டாகும். இதற்கு சரியான மருத்துவமாக சாம்பல், சுண்ணாம்பு, தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தடவினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும் என்பார்கள். இந்த காரணத்தினாலும் வீட்டிற்கு முன்னால் முருங்கை மரத்தை வளர்க்க கூடாது என்பார்கள். வீட்டை பாதிக்காத அளவிற்கு சற்று தள்ளி தாராளமாக முருங்கை மரத்தை வளர்த்து பயன் பெறலாம் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.